உரையாடல் 17
என்ன விசேஷம்?
ராஜா - வாருங்கள், வாருங்கள். நல்ல சமயத்தில் வந்திருக்கிறீர்கள். அன்றைக்கு
ஒரு நாள் நீங்கள் பிரியமாகச் சாப்பிட்டீர்களே, அந்த இனிப்பை
இன்றைக்கும் செய்திருக்கிறோம். இந்தாருங்கள்.
எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜிம் - இன்றைக்கு ஏதாவது விசேஷமா?
ராஜா - ஆமா. இன்றைக்கு எங்களுக்கு வருஷப் பிறப்பு. எங்களுக்குத் தனி மாதம்,
வருஷம் எல்லாம் இருக்கின்றன. உங்களூக்குத் தெரியும் அல்லவா?
ஜிம் - ஓ, நன்றாகத் தெரியும். ஆனால் விவரமாகத் தெரியாது. உங்களூக்கு
ஒரு வருஷத்துக்குப் பன்னிரண்டு மாதங்கள்தானே!
ராஜா - ஆமா. அதில் என்ன சந்தேகம்? ஆனால் ஒவ்வொரு மாதத்துக்கும்
சரியாக முப்பது நாட்கள் இருக்காது. சில மாதங்களுக்கு இருபத்தெட்டு
நாள் இருக்கும். சில மாதங்களுக்கு முப்பத்திரண்டு நாள் இருக்கும்.
ஜிம் - எந்தெந்த மாதத்துக்கு முப்பத்திரண்டு நாள் இருக்கும்?
ராஜா - அப்படி ஒரு கணக்குக் கிடையாது. அது வருஷா வருஷம் மாறும்.
ஜிம் - நான் இன்றைக்குக் காலையில் வயல் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது சில பேர் வேப்பம்பூ பறித்துக்கொண்டிருந்தார்கள். அது
எதற்கு?
ராஜா - இப்போதுதான் வேப்பமரம் பூக்கும். வருஷப் பிறப்பு அன்றைக்குச் சில
வீடுகளில் வேப்பம்பூ பச்சடி பண்ணுவார்கள். அதோடு ஒரு இனிப்புப்
பச்சடியும் பண்ணுவார்கள். வாழ்க்கையில் இனிப்பு, கசப்பு இரண்டும்
இருக்கின்றன, இல்லையா?
ஜிம் - அது ரொம்ப உண்மை. வருஷப் பிறப்பு அன்றைக்கு வேறு ஏதாவது
விசேஷம் உண்டா?
ராஜா - அன்றைக்கு நாங்கள் புதுத் துணி கட்டுவோம். சில பேர் வீட்டுக்குப்
புதிதாக வெள்ளை அடிப்பார்கள். சாமி கும்பிட்டுவிட்டு வீட்டில் எல்லாரும்
மத்தியானம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். அன்றைக்குக் கறி
சாப்பிடவே மாட்டோம். சாயங்காலம் பலகாரம் செய்வோம். எங்கள்
பண்டிகையில் சாப்பாடுதான் முக்கியம்!
ஜிம் - நான் இன்றைக்கு உங்கள் வருஷப் பிறப்பைப் பற்றி ரொம்ப விஷயங்கள்
தெரிந்துகொண்டேன். இன்னும் கொஞ்சம் இதைப் பற்றித் தெரிந்து-
கொள்ள வேண்டும். அதை இன்னொரு நாள் கேட்கிறேன்.