19. கல்யாணச் சாப்பாடு

உரையாடல் 19

                                                                                           கல்யாணச் சாப்பாடு

 

ஜிம்   -  எங்கேயோ வெளியில் புறப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்போல் இருக்கிறது.

         வெளியூருக்கா? 

 

ராஜா  -  இல்லை.  உள்ளூரில்தான் ஒரு கல்யாணத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்-

         கிறேன்.  நீங்களும் வருகிறீர்களா?

 

ஜிம்   -  அழைப்பு இல்லாமல் வரலாமா?

 

ராஜா  -  ஓ, தாராளமாக வரலாம்.  யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

 

ஜிம்   -  இது யார் கல்யாணம்?

 

ராஜா  -  என் மனைவியின் பெரியம்மா மகன் கல்யாணம்.  அதனால் போயாக

         வேண்டும்.

 

ஜிம்   -  பெண் இந்த ஊர்தானா?

 

ராஜா  -  ஆமா,  பெண் வீட்டில்தான் கல்யாணம் நடக்கும்.

 

ஜிம்   -  உங்கள் மனைவி வரவில்லையா?

 

ராஜா  -  அவள் நேற்றே போய்விட்டாள்.  நாம் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்குப்

         போய் பிறகு அங்கிருந்து ஊர்வலத்தோடு பெண் வீட்டுக்குப் போவோம்.

 

ஜிம்   -  மாப்பிள்ளை வீடு எங்கே இருக்கிறது?

 

ராஜா  -  இதோ வந்துவிட்டோம்.  காலைச் சாப்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

         வாருங்கள்.  நாமும் சாப்பிட்டுவிடுவோம்.

 

ஜிம்   -  நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன்.  நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.

         நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்.

 

ராஜா  -  கல்யாண வீட்டில் சாப்பிடாமல் போகக்கூடாது.  இரண்டு இட்லி மட்டும்

         சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுங்கள்.

 

ஜிம்   -  சரி.  உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்?

 

ராஜா  -  வயிறு நிறைய சாப்பிட்டாயிற்று.  நீங்கள் வெற்றிலை போடுகிறீர்களா?

 

ஜிம்   -  எனக்குப் பழக்கம் இல்லை.  நீங்கள் போடுங்கள்.  நான் பார்த்துக்கொண்-

         டிருக்கிறேன். 

 

ராஜா  -  ஓ.  ஊர்வலம் புறப்பட்டுவிட்டது.  வாருங்கள்.  நாமும் அதோடு சேர்ந்து-

         கொள்வோம்.

 

ஜிம்   -  இப்போது நேராகப் பெண் வீட்டுக்குத்தான் போகிறோமா?

 

ராஜா  -  ஆமா.

 

ஜிம்   -  அங்கே என்னவெல்லாம் நடக்கும்?

 

ராஜா  -  எல்லாம் விவரமாகச் சொல்கிறேன்.  வாருங்கள், பேசிக்கொண்டே

         நடப்போம்.