22. தீயில் எப்படி நடக்கிறார்கள்?

உரையாடல் 22

                                                             தீயில் எப்படி நடக்கிறார்கள்?

 

ராஜா  -  என்ன! நேற்று பூராவும் ஆளையே காணோம்.

 

ஜிம்   -  பொங்கலில் இரண்டு நாட்கள் சரியாகத் தூங்காததனால் நேற்றுப் பூராவும்

         தூக்கம் தூக்கமாக வந்தது.  பகல் பூராவும் தூங்கினேன்.

 

ராஜா  -  நானும் அப்படித்தான்.  நேற்றுக் காலையில் சாப்பிட்டுவிட்டுப் பத்து

         மணிக்குப் படுத்தவன் சாயங்காலம் ஆறு மணிக்குத்தான் எழுந்திருந்தேன்.

         மத்தியானம் சாப்பிடக்கூட இல்லை.

 

ஜிம்   -  முந்தா நாள் விடிய விடிய விழித்திருந்தது வீணாகப் போகவில்லை. 

         வெறும் காலோடு தீயில் நடப்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக

         இருக்கிறது.  இதில் ஏதாவது ஏமாற்று இருக்குமோ?

 

ராஜா  -  இல்லை.  இதற்கு நம்பிக்கைதான் காரணம்.  தீ மிதிப்பதற்கு ஒரு மாதத்-

         துக்கு முன்னாலிருந்து இரண்டு வேளை சாப்பிடாமல் இருப்பதும் இதற்கு

         ஒரு காரணமாக இருக்கலாம்.  இன்னொரு காரணம் காலை அழுத்த-

         மாகப் பதிக்காமல் வேகமாக ஓடுவதாக இருக்கலாம்.

 

ஜிம்   -  ஒரு அம்மா மெதுவாக நடந்து போனார்களே.

 

ராஜா  -  ஆமா.  நான் ஒரு தடவை ஒரு ஆள் கங்கை வாரித் தலையில் போட்டுக்-

         கொண்டதைப் பார்த்திருக்கிறேன்.  இதில் சில பேருக்குக் கால்

   புண்ணாகப் போனதும் தெரியும்.

 

ஜிம்   -  அப்போது கடவுள் மேல் நம்பிக்கை வைத்துச் செய்வதனால் இதெல்லாம்

         முடிகிறது, இல்லையா?

 

ராஜா  -  அப்படிச் சொல்வதற்கு இல்லை.  கடவுளை நம்பாதவர்கள்கூட கருப்புக்

         கொடி பிடித்துக்கொண்டு தீக் குழியில் இறங்கிப் போயிருக்கிறார்கள்.

         இவர்களுக்கு வேறு ஒரு நம்ப்பிக்கை.  மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு

         நம்பிக்கை வேண்டும்.  அது இருந்தால் அவன் எதுவும் செய்வான்.

 

ஜிம்   -  உண்மைதான்.