25. போய்விட்டு வருகிறேன்

உரையாடல் 25

                                                                     போய்விட்டு வருகிறேன்

 

ராஜா  -  வாருங்கள், வாருங்கள்.  நீங்கல் வருவதற்காகத்தான் காத்துக்கொண்டி-

         ருக்கிறோம்.  சாப்பாடெல்லாம் அப்போதே தயார் ஆகிவிட்டது.

 

ஜிம்   -  நான் சரியாக நேரத்துக்கு வந்துவிட்டேனே!

 

ராஜா  -  நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.  சாப்பாடு போடச்

         சொல்லட்டும?

       

ஜிம்   -  உங்கள் இஷ்டம். இப்போது சாப்பிடுவதென்றாலும் சாப்பிடுவோம், இல்லை.

         கொஞ்ச நேரம் கழித்துச் சாப்பிடுவோம் என்றாலும் சரி.  எனக்கு எல்லாம்

         ஒன்றுதான்.

 

ராஜா  -  அப்படியானால் சாப்பிட ஆரம்பிக்க வேண்டியதுதான்.  ராணி, இலை

         போட்டு சாப்பாடு எடுத்து வை.  நாங்கள் கால், கை கழுவிக்கொண்டு

         வருகிறோம்.

 

ஜிம்   -  இன்று நிஜமாகவே பெரிய விருந்துதான் போலும்.  ஏற்பாடெல்லாம் தட-

         புடலாக இருக்கிறதே.

 

ராஜா  -  சாப்பிட்டுவிட்டு, பிறகு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

 

ஜிம்   -  ராணியின் சமையல் என்றால் கேட்க வேண்டியதில்லை.  எல்லாம் பிரமாத-

         மாக இருக்கிறது.  எனக்கு வயிற்றில்தான் இடம் இல்லை சாப்பிடுவதற்கு.

 

ராஜா  - (ராணியிடம்)  தமிழ்நாடு என்றால் இவ்வளவு பிடிக்கிறதே, இன்னும்

         கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போங்கள் என்றால் கேட்கமாட்டேன்

         என்கிறார்.  

 

ராணி  -  அவர்களுடைய ஊருக்குப் போக வேண்டும், ஆட்களைப் பார்க்க

   வேண்டும் என்று அவருக்கு ஆசை இருக்காதா?   நீங்கள் இப்படி    

         இதையெல்லாம் விட்டுவிட்டு எங்கேயாவது போய் வருஷக் கணக்கில்  

          இருப்பீர்களாக்கும்.

 

ராஜா  -  நானாவது போகிறதாவது!  இட்டிலி, தோசை இல்லாமல் என்னால் ஒரு

         வாரம்கூட இருக்க முடியாதே.

 

இளங்கோ  -  நான் இருப்பேன், அப்பா.  நான் ஜிம் சித்தப்பாவுடன் அமெரிக்கா-

         வுக்குப் போகட்டுமா, அப்பா?

 

ராஜா  -  படித்துப் பெரியவன் ஆனபிறகு நீயாகப் போ.

 

இளங்கோ  -  சரி அப்பா.  இப்போதிருந்தே நன்றாகப் படிக்கிறேன்.

 

ராஜா  -  ஜிம், சாப்பிட்டு முடித்ததும் இவனுக்குப் பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்-

         லிக் கொடுத்த கதைகளைக் கேட்கிறீர்களா?  அழகாகச் சொல்லுவான்.

 

ஜிம்   -  ஓ, எனக்குத் தெரியுமே, இளங்கோ கெட்டிக்காரன் என்று.  உனக்குத்

         தெரிந்த எல்லால் கதைகளையும் எனக்குச் சொல்ல வேண்டும், என்ன?

 

இளங்கோ  -  ஓ, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்கிறேன்.