13. வேலைக்காரன் செய்த வேலை

                                                      13.  வேலைக்காரன் செய்த வேலை

பக்கத்து ஊரில் மாட்டுச் சந்தை நடந்தது.  செட்டியார் ஒரு பசு வாங்க வேண்டும் என்று விரும்பினார்.  தனியே பக்கத்து ஊருக்குப் போக அவருக்குப் பயம்.  காட்டு வழியாகப் போகவேண்டுமே!  அவருடைய வேலைக்காரன் சிவத்தையா ஒரு அப்பாவி.  என்ன வேலை சொன்னாலும் அவன் செய்வான்.  செட்டியார் அவனிடம், “நீ என்னோடு பக்கத்து ஊருக்கு வருகிறாயா?  உனக்கு ஐந்து ரூபாய் தருகிறேன்” என்றார்.  அவன் “சரி” என்றான்.

 

செட்டியாரும் சிவத்தையாவும் காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.  தூரத்தில் கூச்சல் கேட்டது.  கொள்ளைக்கார்கள் வருகிறார்கள் என்று செட்டியார் புரிந்துகொண்டார்.  அவர்களிடமிருந்து எப்படித் தப்புவது?  செட்டியார் யோசித்தார்.  “சிவத்தையா!  நீ இந்த மரத்தடியில் படுத்துக்கொள்.  அசையாதே!  கண்ணைத் திறக்காதே!  பிணம் என்று நினைத்துக் கொள்ளைக்காரர்கள் உன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார்.  சிவத்தையா அப்படியே படுத்துக்கொண்டான்.  செட்டியார் இன்னொரு மரத்தடியில் படுத்துக்கொண்டார்.

 

கொள்ளைக்காரர்கள் வந்தார்கள்.  சிவத்தையா படுத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.  ஒரு கொள்ளைக்காரன் சிவத்தையாவின் விலாவில் ஒரு உதை கொடுத்தான்.  அப்போதும் சிவத்தையா அசையவில்லை.  “செத்த பிணம்” என்றான் கொள்ளைக்காரன்.

 

“நான் பிணமா?  பிணம் எங்கேயாவது ஐந்து ரூபாயை மடியில் கட்டிக்கொண்டிருக்குமா?” என்றான் சிவத்தையா.

 

கொள்ளைக்காரர்கள் அவனுடைய மடியிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டார்கள்.  “அட!  இந்த ‘நோட்டு’ அழுக்காய் இருக்கிறதே!  இது செல்லுமா?” என்றான் ஒரு கொள்ளைக்காரன்.

 

சிவத்தையா “ஏன் செல்லாது?  இது செட்டியார் கொடுத்தது.  இது செல்லாது என்றால், அவர் மடியில் இருக்கிற ஆயிரம் ரூபாயும் செல்லாது” என்றான்.

 

கொள்ளைக்காரர்கள் செட்டியாரிடமிருந்த ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

 

பாவம் செட்டியார்!

 

Glossary

 

சந்தை                                              fair, market

செட்டியார்                                     a trading caste, trader

பசு                                                      cow

விரும்பு (விரும்ப, விரும்பி)   like

தனியே                                            alone

பயம்                                                 fear

காடு                                                  forest

வேலைக்காரன்                           servant

அப்பாவி                                          innocent

தா (தர, தந்து)                                 give (கொடு)

கூச்சல்                                             noise from loud talking

கொள்ளைக்காரன்                       plunderer, bandit

புரிந்து கொள்                                 understand

மரத்தடியில்                                  under the tree

படு (படுக்க, படுத்து)                    lie down                                 

அசை (அசைக்க, அசைத்து)    move

திற (திறக்க, திறந்து)                  open

பிணம்                                               corpse

விலா                                                 ribs

உதை                                                kick

மடி                                                     folded upper end of the dhoti

கட்டிக்கொள்                                  tie

நோட்டு                                            currency bill

செல்லாது                                       (of currency) will not go

ஆயிரம்                                             thousand

 

Notes

 

  1. வாங்க வேண்டும் என்று விரும்பினார்: This is equivalent to வாங்க விரும்பினார். The given construction reproduces the thinking in the mind of the person. This is a feature of informal style. The same is true of வாங்க வேண்டும் என்று ஆசை = வாங்க ஆசை. Another example, which reproduces conversing style is சரி என்றான், which is equivalent to ஒத்துக்கொண்டான்.
  2. என்ன வேலை சொன்னாலும்: –உம் is added to a conditional clause to give the sense that the condition is special and the clause translates as ‘even if’. When there is a question word in the conditional clause, it gives the sense that the condition is not specific, but is open ended. It translates as ‘whatever, whoever, wherever etc’. The given clause will translate as ‘whatever work is ordered. Or .no matter what work is ordered’. Another example: யார் வேலை சொன்னாலும் ‘whoever orders work’; யார் என்ன வேலை சொன்னாலும் ‘whoever orders whatever work’

 

 

 

Exercise

 

அ. . கீழே உள்ள கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் எழுது

Give detailed answer to the questions below.

 

1. செட்டியார் சந்தைக்கு ஏன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டுபோனார்?

2. கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பிக்கச் செட்டியார் என்ன யோசனை சொன்னார்?

3. செட்டியாரிடம் பணம் இருந்தது கொள்ளைக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது?

 

ஆ.. முதல் பத்தியில் பல வாக்கியங்களில் சொற்களைப் பொருள் மாறாமல் இடம் மாற்றி எழுதலாம். அப்படி மாற்றி இந்தப் பத்தியைத் திரும்ப எழுது.

The words in many sentences in the first paragraph of the story could be reordered without change of meaning. Rewrite this paragraph by changing the order of words in those sentences.

 

இ. Add உம் to the end of the underlined words or phrase and  translate both sentences.

 

Ex. அவனுக்கு எது பிடிக்கும்? ‘Which one does he like?’

    அவனுக்கு எதுவும் பிடிக்கும். ‘He likes anything / everything’

 

  1. அப்பாவுக்கு எப்போது கோபம் வரும்?

 

  1. அக்கா யாரோடு பேசமாட்டாள்?

 

  1. யார் சொன்ன கதை அவளுக்குப் புரியவில்லை?

 

  1. தம்பி எங்கே போனால் அம்மாவுக்குப் பிடிக்காது?

 

  1. தம்பி என்ன வேலை செய்தால் அப்பாவுக்குப் பிடிக்கும்?