15. நூறு வடை

 

                                                                      15- நூறு வடை

முத்தையா ஓர் ஏழை.  தாயம்மாள் அவனுடைய மனைவி.  முத்தையாவுக்கு வடை மிகவும் பிடிக்கும்.

“வடை சுடேன்” என்று அவன் அடிக்கடி மனைவியிடம் சொல்வான்.

“உங்களுக்கு வடை வேண்டுமா?”  வடை சுடப் பருப்பு, எண்ணெய் எல்லாம் வேண்டும்.  இந்தச் சாமான்களை வாங்கப் பணம் வேண்டுமே!  நம்மிடம் பணம் இல்லையே!” என்று அவள் முணுமுணுப்பாள்.

ஒரு நாள் முத்தையா கடைத்தெரு வழியாகப் போய்க்கொண்டிருந்தான்.  ஒரு கடைக்காரர் தண்ணீர் குடிக்க உள்ளே போனார்.  முன்பக்கம் யாரும் இல்லை.  பணப் பெட்டியை அவர் பூட்டவில்லை.  அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த ஒரு திருடன் இதைப் பார்த்துவிட்டான்.  பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்தான்.  இதையெல்லாம் பார்த்த முத்தையா, “திருடன்! திருடன்!” என்று சத்தம் போட்டான்.  ஓடிப் போய்த் திருடனைப் பிடித்துக்கொண்டான்.  கடைக்காரர் உள்ளேயிருந்து வெளியே ஓடி வந்தார்.  அதே சமயத்தில் போலீஸ்காரர்களும் வந்தார்கள்.  அவர்கள் திருடனைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 

“முத்தையா! நீதான் என் பணத்தைக் காப்பாற்றினாய்.  உனக்கு என்ன வேண்டும்?  கேள். தருகிறேன்” என்றார் கடைக்காரர்.

“எனக்கு ரொம்ப நாளாக வடை சாப்பிட  வேண்டும் என்று ஆசை.  பருப்பு, எண்ணெய் எல்லாம் கொடுங்கள்” என்றான் முத்தையா.

வடைக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் கடைக்காரர் கொடுத்தார்.  முத்தையா வீட்டுக்கு வந்தான்.  “இதோ! சாமான்கள்!  எனக்கு நூறு வடை வேண்டும்.  சுட்டுக்கொடு” என்று தாயம்மாளிடம் சொன்னான்.

தாயம்மாள் வடை சுட்டாள்.  அவளுக்கும் வடை மிகவும் பிடிக்கும்.  சட்டியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்த உடனேயே அவள் வடையைத் தின்றாள்.  இப்படி தொண்ணூற்று ஒன்பது வடைகளைத் தின்றுவிட்டாள்.  நூறாவது வடையை மட்டும் முத்தையாவுக்குக் கொடுத்தாள்.

“எனக்கு ஒரு வடைதானா?  நூறு வடை கேட்டேனே!” என்றான் முத்தையா.

“மற்றதையெல்லாம் நான் தின்றுவிட்டேன்” என்றாள் அவள்.

“தொண்ணூற்றொன்பது இருந்திருக்குமே!  அத்தனையும் நீ எப்படித் தின்றாய்?”

“இப்படித்தான்” என்று சொல்லிக்கொண்டே அவள் நூறாவது வடையையும் தின்றுவிட்டாள்.

 

Glossary

நூறு                                                                                     hundred

வடை                                                                                  a fried snack

ஓர்                                                                                        a  Alternate: ஒரு

ஏழை                                                                                   poor

சுடு (சுட, சுட்டு)                                                                fry

அடிக்கடி                                                                             often

பருப்பு                                                                                  dhal

எண்ணெய்                                                                         oil

சாமான்                                                                               things

பணம்                                                                                   money

முணுமுணு (முணுமுணுக்க, முணுமுணுத்து)            mutter, murmur

கடைத்தெரு                                                                               bazaar

பணப்பெட்டி                                                                              cash box

பூட்டு (பூட்ட, பூட்டி)                                                                  lock

திருடன்                                                                                         thief

பிடி (பிடிக்க, பிடித்து)                                                               catch, hold

அதே                                                                                               same

சமயம்                                                                                             time   Alternate: நேரம்

போலீஸ்காரர்                                                                              policeman

காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)                                    save, protect                  

தா (தர, தந்து)                                                                               give

சுடு (சுட, சுட்டு)                                                                            fry

சட்டி                                                                                               (frying) pan, pot (with wide mouth)

ஒவ்வொன்றாக                                                                         one by one

தொண்ணூறு                                                                             ninety

மற்றது                                                                                         other thing

 

Notes

  1. சுடேன்: ஏன் (யேன் with verbs that end in அ, ஆ and ஓ: நடயேன், வாயேன், போயேன்) is added to the imperative form of the verb (singular and plural) to make the command suggestive. It translates as ‘why don’t you?’
  2. எல்லாம்: When nouns are enumerated without -உம் at the end of every noun, எல்லாம் is added at the end of listing the nouns. It also suggests that the list is not exhaustive. In formal style ஆகியவை or முதலியவை is used in the place of எல்லாம். Example: பருப்பு, எண்ணெய் எல்லாம் வேண்டும். When the nouns are human the form is எல்லாரும்: அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லாரும் வந்தார்கள்.

             When this word is used with a neuter singular noun and means the set is complete, the noun has the plural sense Example: சாமானையெல்லாம் ‘all the things’. It is     equivalent of using the neuter plural noun: சாமான்களையெல்லாம்

  1. அவ்வழி: This is formal equivalent of அந்த வழி.  Similarly, இக்கடை is equivalent to இந்தக் கடை, எவ்வூர் to எந்த ஊர். Note than when the head noun begins in a vowel, the modifying form ends in -வ்-.
  2. ஒவ்வொன்றாக: The numeral is doubled to give the sense of distribution from a set or sets. When the numeral is ஒன்று, the first of the doubled form is ஒவ்-. Examples: ஒவ்வொன்றாகக் கொடு ‘give one by one’, ஒவ்வொன்று கொடு ‘give one in each’; இரண்டிரண்டு பேராக வாருங்கள் ‘come in twos’, இரண்டிரண்டு பேர் வாருங்கள் ‘come two from each (group)’

 

Exercise

 

அ. கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்.

       Answer the following questions

 

1. முத்தையா ஏன் வடை சாப்பிட முடியவில்லை?

2. வடை செய்ய என்ன வேண்டும்?

3. கடைக்காரர் எதற்கு உள்ளே போனார்?

4. திருடன் எப்படி பணத்தை எடுக்க முடிந்தது?

5. திருடனைப் பிடித்தது யார்?

6. கடைக்காரர் முத்தையாவுக்கு என்ன தருகிறேன் என்று சொன்னார்?

7. முத்தையா கடைக்காரரிடம் என்ன கேட்டான்?

8. முத்தையாவின் மனைவி எத்தனை வடையைத் தானே சாப்பிட்டுவிட்டாள்?

9. முத்தையாவுக்குக் கடைசி வடை கிடைத்ததா?

10.ஒரு வடைகூட கிடைக்காதபோது முத்தையா என்ன செய்திருப்பான்?

 

ஆ. சொற்களைப் பிரித்து எழுது.

       Split the words.

 

Ex. இதையெல்லாம்                இதை எல்லாம்

 

1. சுடேனென்று

2. எண்ணெயெல்லாம்

3. பணமில்லையே

4. யாருமில்லை

5. வந்தவொரு

6. பணத்தையெடுத்தான்

7. உனக்கென்ன

8. கொடுங்களென்றான்

9. சட்டியிலிருந்தவொன்றை

10. தொண்ணூற்றொன்பது

 

இ. Add எல்லாம்  to the underlined noun in the sentence below and translate the sentences your made.

 

            Ex. எனக்கு இது வேண்டும்

                  எனக்கு இதெல்லாம் வேண்டும் ‘I want all these things’

 

  1. எனக்குக் கார், வீடு வேண்டும்.

 

  1. திருடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

 

  1. நான் வடையை சாப்பிட்டுவிட்டேன்.

 

  1. வடைக்கு வேண்டிய சாமன்களை அவன் வாங்கிக்கொண்டான்.

 

  1. சிகாகோவுக்கு உன்னோடு யார் வந்தார்கள்?

 

  1. நீ எங்கே போகிறாய்?

 

  1. உன் வகுப்பு மாணவர்கள் எங்கே போகிறீர்கள்?

 

  1. நாங்கள் பேனா, பென்சில் வாங்கினோம்.

 

  1. நான், தம்பி, அக்கா தமிழ்ப்படம் பார்த்தோம்.

 

  1. ஊரில் வெள்ளம் (Locative case marker is not necessary when எல்லாம் is added)