16. ஊமைக் கதை

                                                                                                            16- ஊமைக் கதை

 

நந்தன் ஒரு வீட்டில் குடியிருந்தான்.  அடுத்த வீட்டில் ராஜையா குடியிருந்தான்.  நந்தனிடம் ஒரு காளைமாடு இருந்தது.  ராஜையாவிடமும் ஒரு காளைமாடு இருந்தது.  நந்தன் வீட்டுக்கு முன்னே ஒரு வேப்பமரம் நின்றது.  ராஜையா வீட்டுக்கு முன்னே ஒரு விளக்குத்தூண் நின்றது.  ஒரு நாள் நந்தன் தன் மாட்டை அந்த வேப்பமரத்தில் கட்டினான்.  அப்போது ராஜையா தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான்; அந்த மாட்டை விளக்குத்தூணில் கட்டப்போனான்.  நந்தன் அவனிடம், “என் மாடு முரட்டு மாடு.  இது உன் மாட்டை முட்டிக் கொன்றுவிடும்.  இதற்குப் பக்கத்தில் உன் மாட்டைக் கட்டாதே” என்று சொன்னான்.  ராஜையா அதைக் கவனிக்காதவன் மாதிரி தன் மாட்டை விளக்குத் தூணில் கட்டினான்.  இரண்டு பேரும் வீட்டுக்குள்ளே போய்விட்டார்கள்.  அவர்கள் வெளியே வந்தபோது ராஜையாவின் மாடு ரத்தவெள்ளத்தில் கிடந்தது.  நந்தனுடைய மாட்டின் கொம்பெல்லாம் ரத்தம்.

 

“உன் மாடுதான் என் மாட்டைக் குத்திக் கொன்றுவிட்டது.  நீ எனக்கு நஷ்டஈடு தர வேண்டும்” என்றான் ராஜையா.

 

‘என் மாடு முரட்டு மாடு என்று எச்சரித்தேன்.  நீ கேட்கவில்லை.  என் மேல் தப்பு இல்லை” என்றான் நந்தன்.

 

“நீதிபதியிடம் வா” என்று ராஜையா நீதிபதியிடம் நந்தனை இழுத்துக்கொண்டு போனான்.  ராஜையா தன் கட்சியைச் சொன்னான்.  நீதிபதி நந்தனை விசாரிக்க ஆரம்பித்தார்.  நந்தன் வாயைத் திறக்காமல் ஊமையைப் போல நின்றான்.  “இந்த ஊமையை எப்படி விசாரிக்க முடியும்?” என்றார் நீதிபதி.  “இவன் இப்போது ஊமை போல் நடிக்கிறான்.  நான் விளக்குத்தூணில் மாட்டைக் கட்டப் போனபோது என்னிடம் பேசினான்” என்றான் ராஜையா.

 

 “என்ன பேசினான்?” என்று கேட்டார் நீதிபதி.

 

“கட்டாதே என்று சொன்னான்” என்றான் ராஜையா.

 

“அவன் கட்டாதே என்று சொன்னானா?  அப்படி என்றால் நீ ஏன் கட்டினாய்?  உன் மேல்தான் தப்பு.  உனக்கு அவன் நஷ்டஈடு கொடுக்க வேண்டியது இல்லை” என்று நீதிபதி சொல்லிவிட்டார்.

 

“ராஜையாவிடமிருந்தே உண்மையை வரவழைக்கத்தான் நான் ஊமையானேன்” என்றான் நந்தன்.

 

Glossary

 

ஊமை                                                                      dumb

கதை                                                                         story

குடியிரு (குடியிருக்க, குடியிருந்து)            reside

காளைமாடு                                                           bull

முன்னே                                                                 in front of   (முன்னால்)

வேப்ப மரம்                                                          neem tree

விளக்குத்தூண்                                                  lamp post

ஓட்டு (ஓட்ட, ஓட்டி)                                         drive along

முரட்டு மாடு                                                       violent bull

முட்டு (முட்ட, முட்டி)                                      knock against

கவனி (கவனிக்க, கவனித்து)                        pay attention

கட்டு (கட்ட, கட்டி)                                             tie

ரத்தவெள்ளம்                                                       pool of blood

கிட (கிடக்க, கிடந்து)                                         be lying

கொம்பு                                                                     horn

குத்து (குத்த, குத்தி)                                            pierce

நஷ்ட ஈடு                                                              compensation

எச்சரி (எச்சரிக்க, எச்சரித்து)                       warn

தப்பு                                                                        mistake

நீதிபதி                                                                   judge

கட்சி                                                                      position in the case, side of the case

விசாரி (விசாரிக்க, விசாரித்து)                    enquire

வரவழை (வரவழைக்க, வரவழைத்து)      bring out

நடி (நடிக்க, நடித்து)                                            act

 

Notes

 

1.மாதிரி: This is a word of comparison meaning ‘like, as’ and it is added to the noun that is compared. The noun is commonly in its nominative. It may be in the accusative form optionally: அப்பா மாதிரி / அப்பாவை மாதிரி; சிகாகோ மாதிரி / சிகாகோவை மாதிரி. The accusative form is obligatory with pronouns: அவனை மாதிரி, என்னை மாதிரி

It has other senses that include ‘as if’: என் நண்பன் மாதிரி நடித்தான் ‘(he) acted as if he is my friend / he acted as my friend’; என்னைத் தெரிந்தவன் மாதிரி பேசினான் ‘(he) spoke (to me) as if he is a person who knew me’.

மாதிரி occurs with noun modifiers also. அது மாதிரி / அந்த மாதிரி இல்லை ‘(This) is not like that’;  இது கெட்டது / கெட்ட மாதிரி இல்லை ‘It does not look like spoiled’; என்னைத் தெரிந்தவன் / தெரிந்த மாதிரி பேசினான் ‘(he) spoke (to me) as if he knew me’.

When the noun modifier is a relative participle, மாதிரி can also have the sense of ‘in a manner’: புரிகிற மாதிரி சொல்லு ‘Tell (me) in a way that I understand (it)’. The tense marker of the non-past relative participle in formal Tamil also is of the present as in புரிகிற மாதிரி சொல்  (not of the usual future: *புரியும் மாதிரி சொல்), as in colloquial Tamil. Its formal equivalent of the future tense has படி: புரியும்படி சொல், which is also used in colloquial Tamil.

2. போல: This is a word of comparison like மாதிரி, but it commonly occurs with the noun in the accusative. என் அண்ணனைப் போல / என் அண்ணன் போல என் தம்பியும் கெட்டிக்காரன் ‘My younger brother is smart like my elder brother’. போல does not occur with noun modifiers. The formal equivalent of போல is போல்.

3. வேண்டியது இல்லை: வேண்டும், வேண்டாம் have the senses of ‘be desirous (want)’ and ‘be necessary (must)’. When the sense of obligation (must) alone is to be expressed, the noun form வேண்டியது is used with the ‘be’ verb: வேண்டியதிருக்கிறது ‘have to do’, வேண்டியதில்லை ‘does not have to’. These have alternate forms with the verbal participle: வேண்டியிருக்கிறது; வேண்டியில்லை

 

Exercise

     அ.  நீதிபதியிடம் என்ன வழக்கு வந்தது?   (வழக்கு 'case')

 

     ஆ. . . கீழே உள்ள வாக்கியங்களில் சந்திப் பிழை இருக்கிறது. பிழையைத் திருத்தி வேண்டிய இடத்தில் மெய்யெழுத்தை இரட்டித்து எழுது

      There are sandhi errors in the sentences below. Correct them by doubling the consonant where necessary.

 

1. வீட்டுக்கு முன்னே ஒரு விளக்குதூண் இருந்தது.

2. மாட்டை மரத்தில் கட்டபோனான்.

3. இங்கே உன் மாட்டை கட்டாதே

4. என் மாடு உன் மாட்டை முட்டி கொன்றுவிடும்.

5. மரத்துக்கு பக்கத்தில் மாடு நின்றது.

6. ராஜையா நந்தனை இழுத்துகொண்டுபோனான்

7. நந்தன் வாயை திறக்காமல் நின்றான்.

8. நஷ்டஈடு உனக்கு கொடுக்க வேண்டியதில்லை.

9. உண்மையை வரவழைக்கதான் நான் ஊமை போல் நடித்தேன்.

10. இந்த நாடோடி கதை தெரிந்த கதை.

 

 இ.  The following words of location have equivalents in colloquial style.

      Some words such as அருகில், மீது are not used in the colloquial

      style. Give the colloquial forms and their meaning.

 

           Ex. முன், முன்னால்               முன்னே, முன்னாலே ‘before, in front of’

 

  1. பின், பின்னால்
  2. அருகில், பக்கத்தில்
  3. கீழ்
  4. மீது, மேல்
  5. அடியில்