23. துறவு
ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவருக்கு வீடுவாசல், மனைவிமக்கள் ஒன்றும் இல்லை. பசித்தால் ஊரில் பிச்சை எடுப்பார். மற்ற நேரமெல்லாம் தியானம், பஜனை இப்படி ஏதாவது செய்வார்.
அவருடைய ஆடை கோவணம். இரண்டே இரண்டு கோவணம்தான் அவரிடம் உண்டு ஒன்றை அணிவார்; மற்றதைத் துவைத்துக் காயப்போட்டிருப்பார்.
ஒரு நாள் காலையில் சாமியார் குளித்துவிட்டு வந்தார். கோவணத்தை மாற்ற நினைத்தார். முதல் நாள் காயப் போட்டிருந்த கோவணத்தை எடுத்தார். அதை எலி கடித்திருந்தது. எலிகளை ஒழிப்பதற்காகச் சாமியார் ஒரு பூனையை வளர்த்தார். பூனைக்குத் தினமும் பால் கொடுக்க விரும்பினார். ஊர் மக்கள் சாமியாருக்கு சாப்பாடு கொடுப்பார்கள்; சாமியாருடைய பூனைக்குமா பால் கொடுப்பார்கள்? சாமியார் யோசித்தார். பாலுக்காக ஒரு பசுவை வாங்கினார். காலையிலும் மாலையிலும் அவரே பால் கறந்து பூனைக்குக் கொடுத்தார். பசுவுக்குப் புல் கொண்டுவருவது, அதைக் குளிப்பாட்டுவது முதலிய வேலைகளையும் சாமியாரே செய்தார். இப்போது அவருக்குத் தியானத்துக்கு நேரமே கிடைக்கவில்லை. அவர் யோசித்துப் பார்த்துவிட்டு, ஒருவனை வேலைக்கு வைத்தார். பசுவின் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார்.
ஒரு வாரம் கழிந்தது. வேலைக்காரன் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. சில நாள் வருவான்; சில நாள் வர மாட்டான். என்ன செய்வது என்று சாமியார் யோசித்துப் பார்த்தார். வேலைக்காரனை மேற்பார்க்க வேண்டும்; அவன் வராத நாளில் அவனுடைய வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கு என்ன வழி? சாமியார் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம்செய்துகொண்டார்.
ஒரு நாள் இரவு. முழு நிலா. சாமியார் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவருடைய மனைவி அழுதுகொண்டே வந்தாள். “எப்பொழுது பார்த்தாலும் தியானமா? நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டீர்களா? என்னை ஏன் கல்யாணம்செய்தீர்கள்?” என்று கேட்டாள்.
சாமியார் யோசித்தார்: “எனக்கு ஏன் கல்யாணம்? பசுவுக்காக. பசு எதற்காக? பூனைக்குப் பால் கொடுக்க. பூனை எதற்கு? எலிகளைக் கொல்வதற்கு. எலிகளை ஏன் கொல்ல வேண்டும்? கோவணத்தைக் காப்பதற்காக....! சே! ஒரு கோவணத்தால்தானே இவ்வளவு தொல்லை” என்று சாமியார் கோவணத்தை எறிந்துவிட்டு அம்மணத் துறவியாகிவிட்டார்.
Glossary
துறவு renunciation
வீடுவாசல் house and other assets
மனைவி மக்கள் wife and the family
பசி hunger
பிச்சை எடு (எடுக்க, எடுத்து) beg
தியானம் meditation
பஜனை singing hymns
ஏதாவது something
ஆடை dress
கோவணம் loin cloth
அணி (அணிய, அணிந்து) wear
மற்றது the other thing
துவை (துவைக்க, துவைத்து) wash
காயப்போடு (-போட, -போட்டு) dry
குளி (குளிக்க, குளித்து) take bath
மாற்று (மாற்ற, மாற்றி) change clothes
நினை (நினைக்க, நினைத்து) think, consider
எலி rat
கடி (கடிக்க, கடித்து) bite
ஒழி (ஒழிக்க, ஒழித்து) eliminate
பூனை cat
வளர் (வளர்க்க, வளர்த்து) raise
தினமும் daily
பால் milk
சாப்பாடு food, meals
கற (கறக்க, கறந்து) milk (the cow)
குளிப்பாட்டு (குளிப்பாட்ட, குளிப்பாட்டி) bathe, give bath
ஒப்படை (ஒப்படைக்க, ஒப்படைத்து) entrust
மேற்பார் (மேற்பார்க்க, மேற்பார்த்து) supervise
கல்யாணம்செய் (செய்ய, செய்து) marry
முழு நிலா full moon
ஆழ்ந்த deep
துற (துறக்க, துறந்து) renounce
அம்மணம் naked
துறவி ascetic
Notes
1.பஜனை இப்படி ஏதாவது: இப்படி ‘such’ suggests that the preceding list is incomplete or is left open. The formal equivalent of it is முதலிய ‘such’, which is often translated as ‘et cetera’. காலையில் இட்லி, தோசை இப்படி எதாவது சாப்பிடுவோம் ‘(We) eat idli, dosai or some such thing in the morning’, காலையில் இட்லி, தோசை முதலியவற்றைச் சாப்பிடுவோம் ‘(We) eat idli, dosai and similar things in the morning’.
2. இரண்டே இரண்டு: -ஏ added to the first of the two repeated numerals limits the count to that number, no more and no less. This is equivalent in emphasis to மட்டும் after the numeral: இரண்டு மட்டும், but there is a difference. The latter is used in the context of a set. கூட்டத்துக்கு இரண்டே இரண்டு பேர் வந்தார்கள் ‘Just two people came to the meeting’, கூட்டத்துக்கு இரண்டு பேர் மட்டும் வந்தார்கள் ‘Only two people came to the meeting (out of many)’.
3. பெண்ணைப் பார்த்து: பார்த்து in this construction suggests selection. The selection could be casual as in the given construction or focused as in ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துக் கல்யாணம்செய்துகொண்டார். It could be just marking the object as the location for some emotion: பெண்ணைப் பார்த்துப் பொறாமைப்பட்டார் ‘(He) was jealous of the woman’. It could be a post-position of direction meaning ‘toward’: வீட்டைப் பார்த்துப் போனார் ‘(He) went toward his house’.
4. நான் ஒருத்தி: An adjective could be post-posed after the noun in a nominal form that agrees with the noun in number and gender. ஒரு பெண் = பெண் ஒருத்தி. Numeral adjectives do not occur before a pronoun (*ஒரு நான்). It should occur in its nominal form after the noun: நான் ஒருத்தி. Another example: நாங்கள் இரண்டு பேர் ‘we two’
Exercise
அ. Answer this question in Tamil in detail.
சாமியார் எப்படி குடும்பஸ்தர் (family man) ஆனார்?
ஆ. Try to predict the meaning of the echo words below.
Ex. மூலை முடுக்கு (மூலை ‘corner’, முடுக்கு ‘narrow gap’) ‘not easily accessible place’
- துணிமணி (துணி ‘cloth’, மணி ‘jewel’)
- அடிதடி (அடி ‘beating’, தடி ‘baton’)
- அரைகுறை (அரை ‘half’, குறை ‘lack’)
- ஓட்டை உடைசல் (ஓட்டை ‘thing with holes', உடைசல் ‘broken thing’)
- அடக்க ஒடுக்கம் (அடக்கம் ‘being unobtrusive’, ஒடுக்கம் ‘being not expansive’)
இ. Like வை ‘keep’ with the infinitive, போடு ‘put’ can be used with the infinitive to make an act happen. Combine போடு with the infinitive of the verbs below and give their meaning.
Ex. காய் ‘be dry’ காயப்போடு ‘dry (something)’
- ஆறு ‘cool’
- படு ‘go to bed’
- தூங்கு 'sleep'
- நில் 'stand'
- படி 'study'
ஈ. The following verses are from ThirukkuraL (c. 3-4th century CE), a classic of ethical literature in Tamil and is celebrated as an embodiment of Tamil wisdom. This work has three parts, 133 chapters and 1330 couplets. These verses are from the 35th chapter called துறவு in the first part called அறத்துப் பால், which is on the right path or values for living. The verses are given with word boundaries after splitting the words combined by sandhi to make the metrical units of வெண்பா in the original verses.
Paraphrase them in English with the help of the annotation and prose rendering of the verses given below.
அ. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
யாது = எது ‘which’
-அனின் = -இலிருந்து ‘from’
நீங்கியான் = நீங்கியவன், i.e. விலகியவன் ‘one who is removed / detached’
நோதல் ‘pain, sorrow’. Cf. நோவு ‘pain’
அதனின் = அது + அனின்
இலன் = இல்லாதவன்
ஒருவன் எது எதிலிருந்து ஆசையை விட்டு விலகுகிறானோ அவன் அது அதிலிருந்து துன்பம் இல்லாதவனாய் இருப்பான்.
ஆ. பற்றுக பற்றற்றான் பற்றினை; பற்றுக அப்
பற்றைப் பற்று விடற்கு
பற்று (verb) ஆசை வை ‘attach yourself, hold on to’
-க (imperative suffix, plural)
பற்று (noun) ஆசை ‘attachment, desire, passion, love’
பற்றற்றான் = பற்று இல்லாதவனுடைய ‘of one who does not have (i.e.is beyond) attachment to / desire of any, god’s’
பற்றினை = பற்றை, ஆசையை
அ = அந்த ‘that’
விடற்கு = விடுவதற்கு ‘for giving up, letting go’
ஆசை இல்லாத இறைவன் மேல் ஆசை வை; உன் மற்ற ஆசைகளை விடுவதற்கு அந்த ஆசையை வைத்துக்கொள்.