3. பேகனும் பெருமாள் பிள்ளையும்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. தமிழ்நாட்டில் ஒரு சின்ன நாடு. அந்த நாட்டுக்கு ஒரு அரசன். அவனுடைய பெயர் பேகன். அவன் சிறந்த வள்ளல். புலவர்கள் அவனைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தான்.
குளிர் காலத்தில் ஒரு நாள் பேகன் தேரில் ஏறிக் காட்டு வழியாகப் போனான். அங்கே ஒரு மயில். அதனுடைய உடம்பு குளிரில் நடுங்கியது. பேகனின் மனம் இளகியது. “மயிலால் பேச முடியாது. தன் குளிரை யாரிடம் சொல்லும்? என்ன செய்யும்?” என்று பேகன் நினைத்தான். தன் தோளிலிருந்த போர்வையை எடுத்து மயிலின் உடம்பை மூடினான். மகிழ்ச்சியோடு அரண்மனைக்குத் திரும்பினான்.
கி.பி. இருபதாம் நூற்றாண்டு. மதுரையில் எல்லோருக்கும் பெருமாள்பிள்ளையைத் தெரியும். அவர் பெரிய பணக்காரர். ஆனால் கஞ்சன்.
ஒரு நாள் பெருமாள்பிள்ளை தெருவழியாகப் போனார். அவருடைய இடுப்பில் எட்டு முழ வேட்டி; உடம்பில் ‘சில்க்’ ஜிப்பா; தோளில் பெரிய துண்டு. தூரத்தில் ஒரு கிழவி, “ஐயோ! அம்மா!” என்று முனகினாள். அவள் ஒரு பிச்சைக்காரி. அவளுடைய இடுப்பில் ஒரு கந்தைத் துணி; மேல் உடம்பில் ஒன்றும் இல்லை. “அவளுக்குக் குளிருக்குப் போர்த்தத் துணி இல்லை. இவருக்குச் சட்டைக்குமேல் துண்டு எதற்கு?” என்று மற்றவர்கள் நினைக்கலாம் என்று பெருமாள்பிள்ளை நினைத்தார். “தன் துண்டை மறைக்க என்ன செய்யலாம்?” என்று யோசித்தார். தன் சட்டையைத் தூக்கித் துண்டை இடுப்பில் கட்டினார். துண்டு சட்டைக்குள் மறைந்தது. வெளியே தெரியவில்லை. பெருமாள்பிள்ளை நிம்மதியாக வீட்டுக்குப் போனார்.
Glossary
The words in parantheses after the gloss are alternate words.
கி. பி. (கிறிஸ்துவுக்குப் பின்) A. D., C.E.
நூற்றாண்டு century
அரசன் king (ராஜா)
வள்ளல் philanthropist
புலவர் poet
பொன் gold
பொருள் asset
குளிர்காலம் winter
குளிர் cold
தேர் chariot
காடு forest
மயில் peacock
உடம்பு body
நடுங்கு (நடுங்க, நடுங்கி) shiver
மனம் இளகு (இளக, இளகி) (mind) soften
தோள் shoulder
போர்வை blanket
மகிழ்ச்சி happiness
அரண்மனை palace
திரும்பு (திரும்ப, திரும்பி) return
கஞ்சன் miser
வழியாக along
இடுப்பு waist
முழம் a measurement from elbow to finger tip
சில்க் silk
ஜிப்பா a long colorless shirt
துண்டு towel
கிழவி old woman
முனகு (முனக, முனகி ) moan
பிச்சைக்காரி female beggar
கந்தை rag
துணி cloth
போர்த்து (போர்த்த, போர்த்தி) cover, wrap
மற்றவர்கள் others
தூக்கு (தூக்க, தூக்கி) lift
மறை (மறைக்க, மறைத்து) hide (something)
மறை (மறைய, மறைந்து) hide (oneself)
நிம்மதி state of relief
Notes
- காட்டு வழியாக: வழியாக has an alternate வழியே. This means ‘through (a passage or area’). Other examples: தெரு வழியாக, வாய் வழியாக
- மகிழ்ச்சியோடு. This has an alternate மகிழ்ச்சியாக. This is generally true of nouns of emotion or mental disposition. Other examples: கோபத்தோடு / கோபமாக, ஆசையோடு / ஆசையாக
- போர்த்தத் துணி: In infinitive + noun construction, the verb is the infinitive describes the purpose for which the object referred to by the following noun is used: ‘cloth for covering’. Another example: படிக்க நேரம் ‘time for reading’. This is different from the construction with the relative participle, which defines the noun, such as போர்த்தும் / போர்த்துகிற துணி ‘the cloth of covering’, படிக்கும் / படிக்கிற நேரம் ‘the time of reading’
Exercises
- (அ) ச ரியா, தப்பா என்று சொல்.
( Say if the following statements are right or wrong)
1. கிறிஸ்து பிறந்த காலத்தில் தமிழ்நாடு ஒரே நாடு.
2. பேகன் அந்த நாட்டின் புலவன்.
3. பேகன் பெரிய கஞ்சன்.
4. பேகன் யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டான்.
5. பேகன் காரில் ஏறிக் காட்டுவழியாகப் போனான்.
6. காட்டில் ஒரு மான் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது.
7. பேகன் மயிலைக் கொன்றான்.
8. பெருமாள்பிள்ளை பெரிய வள்ளல்.
9. கிழவி புடவை கட்டியிருந்தாள்.
10. பெருமாள்பிள்ளை கிழவிக்குத் தன் துண்டைக் கொடுத்தார்.
(ஆ) தப்பு என்று சொன்ன வாக்கியங்களுக்குப் பதில் சரியான வாக்கியங்களை எழு.து
(If you have answered 'wrong', give their right answer in Tamil)
- குளிர்காலம் is a compound made of two nouns குளிர் and காலம். Using காலம், make compounds with the nouns below and give their meaning.
- வெயில் / கோடை
- மழை
- கெட்ட
- நல்ல
- பழைய / பழம்