4. மந்திரவாதியின் காதல்

                                                                                                           4- மந்திரவாதியின் காதல்

 

 

ஒரு ஊரில் ஒரு கிழவி.  அவளுக்கு ஒரு அழகான பெண்.  அந்தப் பெண்ணின் பெயர் பஞ்சி.  அந்த ஊரில் எல்லோருக்கும் பஞ்சியைப் பிடிக்கும்.  அந்த ஊரில் ஒரு மந்திரவாதி இருந்தான்.  அவனுக்குப் பஞ்சி மேல் காதல்.

 

ஒரு நாள் கிழவியும் பஞ்சியும் தொழுவில் இருந்தார்கள்.  அங்கே ஒரு எருமையும் இருந்தது.  மந்திரவாதி அங்கே வந்து பஞ்சியிடம், “என்னைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னான்.  அவள் பதில் சொல்லவில்லை.  அவளுடைய அம்மா, “என் தம்பிக்கு ஒரு மகன் இருக்கிறான்.  அவனுக்கும் இவளுக்கும்தான் கல்யாணம்” என்று சொன்னாள்.

 

மந்திரவாதி, “அப்படியா?  இது இனிப்பான செய்தி!  நானும் உங்களுக்கு இனிப்பு கொடுக்க வேண்டாமா? அம்மா! இந்தாருங்கள்.  உங்களுக்கு ஒரு மாம்பழம்.  பஞ்சி! உனக்கு இந்த மாம்பழம்” என்று கொடுத்தான்.

 

அது ஒரு தந்திரம்.  பஞ்சிக்குக் கொடுத்த மாம்பழம் மந்திர மாம்பழம்.  தன் மந்திர சக்தியால் பஞ்சிக்குப் பழத்தைக் கொடுத்தவர் மேல் காதல் உண்டாக்கும். மந்திரவாதியின் இந்தத் திட்டம் பஞ்சிக்குப் புரிந்தது.  அவள் மாம்பழத்தைச் சாப்பிடாமல் எருமைக்குக் கொடுத்தாள்.  எருமைக்கு மந்திரவாதி மேல் காதல் வந்தது.  அது மந்திரவாதி பக்கத்தில் ஓடியது.  அவன் தன் வீட்டுக்குள் ஓடிப்போய்க் கதவை அடைத்துக்கொண்டான்.  எருமை கதவை உடைத்து வீட்டுக்குள்ளே போய் மந்திரவாதியின் மேல் பாய்ந்தது.  மந்திரவாதியால் எருமையிடமிருந்து தப்ப முடியவில்லை.  எருமை அவனை முட்டிக் கொன்றது.

 

Glossary

 

மந்திரவாதி                                                                         sorcerer, magician

காதல்                                                                                    love

கிழவி                                                                                   old woman

தொழு                                                                                  cattle shed

எருமை                                                                               buffalo

கல்யாணம்                                                                        marriage

பதில்                                                                                    answer

இனிப்பு                                                                               sweetness, sweets

மாம்பழம்                                                                         mango

தந்திரம்                                                                             trick

மந்திர சக்தி                                                                    magic power

உண்டாக்கு (உண்டாக்க, உண்டாக்கி)                make (it) happen, produce

திட்டம்                                                                             plan

அடை (அடைக்க, அடைத்து)                                 shut

உடை  (உடைய, உடைந்து)                                    break

பாய் (பாய, பாய்ந்து)                                                   leap, charge

முட்டிக் கொல் (கொல்ல, கொன்று)                  gorge to death

தப்பு (தப்ப, தப்பி)                                                        escape

 

Exercises

 

  1. (அ). சரியா, தப்பா என்று சொல்.

 

1. கிழவிக்கு ஒரு மகன் இருந்தான்.

2. பஞ்சிக்கு மந்திரவாதியின்மேல் காதல்.

3. கிழவியின் தொழுவில் ஒரு பசு இருந்தது.

4. கிழவி தன் மகளைத் தன் அண்ணன் மகனுக்குக் கல்யாணம்செய்யப் போவதாகச் சொன்னாள்.

5. மந்திரவாதி அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டான்.

6. மந்திரவாதி பஞ்சிக்கு ஒரு ஆப்பிள் கொடுத்தான்.

7. பழத்தைச் சாப்பிட்டவர்களுக்கு அதைக் கொடுத்தவன் மேல் கோபம் வரும்.

8. பஞ்சி பழத்தைக் கிழவிக்குக் கொடுத்தாள்.

9. எருமை மந்திரவாதியின் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.

10. தந்திரம் காதலில் தோல்வியைத் தரும்.

 

(ஆ). தப்பு என்று சொன்ன வாக்கியங்களுக்குப் பதில் சரியான வாக்கியம் எழுது .

 

 

 

  1. Verbs pair into transitive (having an object) and intransitive (the object being the subject) like the verb உடை.

கதவை உடைத்தான் ‘(He) broke the door’ : கதவு உடைந்தது ‘The door broke’

Make similar sentences with the pairs of verbs below and translate them. A noun is given in parentheses to help.

 

  1. அழி ‘destroy’ : அழி ‘get destroyed’ (கோடு ‘line)
  2. மறை ‘hide’ : மறை ‘disappear’ (பணம் ‘money’)
  3. இறக்கு ‘load down, bring down’ : இறங்கு ‘get down, go down’ (பெட்டி box’)
  4. ஏற்று ‘load up, raise’ : ஏறு ‘climb up, rise’ (கொடி ‘flag’)
  5. உண்டாக்கு ‘create’ : உண்டாகு ‘come about’ (குழப்பம் ‘confusion’)