5. வானமும் மரமும்

                                                                                         5- வானமும் மரமும்

 

 

முன் ஒரு காலத்தில் ஒரு செடி வயலோரத்தில் வளர்ந்தது.  அது வளர்ந்து பெரிய மரம் ஆயிற்று.  மரத்தின் கிளைகள் வானத்தில் விரிந்தன.  வானம் கோபம் அடைந்தது.  “ஏ மரமே! நீ மண்ணில் பிறந்தாய்.  மண்ணில்தான் இருக்க வேண்டும்.  உன் சாதி தாழ்ந்த சாதி.  உன் நிலை தாழ்ந்தது.  நீ என் எல்லைக்குள் நுழையக்கூடாது” என்று சொன்னது.

 

மரம், “அட! நீ உயரமான இடத்தில் இருக்கிறாய்.  அதனால் உன் சாதி உயர்ந்த சாதியா?  உன் நிலை உயர்ந்ததா?” என்று கேட்டது.

 

“ஆமாம்.  எல்லாப் பொருள்களையும் நான்தான் காப்பாற்றுகிறேன்.  எல்லாவற்றையும் இங்கிருந்து நான் பார்க்க முடியும்.  என் மாதிரி அறிவு உனக்கு உண்டா?”

 

“ஐயா, அறிஞரே!  நான் முட்டாள்தான்.  எல்லோரையும்விட உன் பெருமை பெரியதுதான். ஆனால் உன்னால் இதற்குமேல் வளர முடியாது.  நான் வளர வேண்டும்.  என் வளர்ச்சிக்கு இடம் வேண்டும்”.

 

“என்னோடு போட்டி போடுகிறாயா?  உன்னை என்ன செய்கிறேன், பார்”.

 

வானம் வெப்பத்தைக் குறைத்தது.  மரத்தால் குளிரைத் தாங்க முடியவில்லை.  இலைகள் பழுத்துக் காய்ந்து உதிர்ந்து காற்றில் பறந்தன.  மரம் மொட்டை ஆயிற்று. 

 

“அழகிய மரமே! உன் இலைகள் எங்கே? உன் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது?” என்று வானம் கேலி செய்தது. 

 

“நீ என் உடம்பை மாற்றலாம்; என் உயிரை உன்னால் அழிக்க முடியாது” என்றது மரம்.

 

“அதையும் பார்க்கலாம்” என்றது வானம்.

 

வானம் பனியைக் கொட்டியது.  தரையெல்லாம் பனி.  மரமெல்லாம் பனி. மரத்திற்குக் குளிரைத் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் அது கீழே சாயவில்லை.

 

மூன்று மாதம் கழிந்தது.  பனி நின்றது.  மரம் தளிர்த்தது.  தளிர் இலை ஆயிற்று.  கொஞ்ச நாளில் பூக்களும் காய்களும் தோன்றின. 

மரம் அழியவில்லை.

 

Glossary

 

வானம்                                                                     sky

செடி                                                                          plant

வயலோரம்                                                           along side the field

வளர் (வளர, வளர்ந்து)                                    grow

கிளை                                                                     branch (of a tree)

விரி (விரிய, விரிந்து)                                     spread

கோபம்                                                                  anger

அடை (அடைய, அடைந்து)                         get, get to

மண்                                                                       soil

பிற (பிறக்க, பிறந்து)                                      be born

சாதி                                                                       species, caste

தாழ் (தாழ, தாழ்ந்து)                                      go low, be reduced

தாழ்ந்த                                                                lowly

நிலை                                                                   status, standing

எல்லை                                                              boundary

நுழை                                                                  enter

உயர் (உயர, உயர்ந்து)                                 go up, rise

உயரம்                                                               height

உயர்ந்த                                                            high, tall

காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)     support, protect

அறிவு                                                               knowledge

அறிஞர்                                                            man of knowledge, learned man

முட்டாள்                                                         foolish (person)

பெருமை                                                        pride

வளர் (வளர, வளர்ந்து)                             grow

வளர்ச்சி                                                         growth

போட்டி போடு                                              compete

வெப்பம்                                                          heat

குறை           (குறைக்க, குறைத்து)       reduce

குளிர்                                                                cold

தாங்கு (தாங்க, தாங்கி)                              bear

இலை                                                               leaf

பழு (பழுக்க, பழுத்து)                                ripen

காய் (காய, காய்ந்து)                                 dry up

உதிர் (உதிர, உதிர்ந்து)                               fall

காற்று                                                             wind, gust

பற (பறக்க, பறந்து)                                   fly

மொட்டை                                                    barren

கேலி செய் (செய்ய, செய்து)                 ridicule, make fun of

மாற்று (மாற்ற, மாற்றி)                          change

அழி (அழிக்க, அழித்து)                          destroy                                                              

பனி                                                                  snow

கொட்டு                                                         pour down,  dump

தரை                                                                ground

சாய் (சாய, சாய்ந்து)                                 fall down

கழி (கழிய, கழிந்து)                                pass, lapse

நில் (நிற்க, நின்று)                                    stop

தளிர் (தளிர, தளிர்த்து)                          sprout

தளிர்                                                             sprout

பூ                                                                    flower

காய்                                                              unripe fruit

உண்டாகு (-ஆக, ஆகி/ஆய்)               come to bear

அழி (அழிய, அழிந்து)                         get destroyed

 

Notes

 

Notes

1. ஆயிற்று:  Its alternates are ஆனது, ஆகியது

2. என்று: its alternate is என. Examples are: திடீரென்று / திடீரென, சரி என்று சொல் / சரி எனச் சொல்

3. உண்டாயின: Formal Tamil makes a distinction morphologically between singular and plural in the neuter. The neuter plural ending is -அ when the past tense suffix is

          -இன்- (ஓடின) and அன elsewhere (வந்தன).கோபம் அடை: This has an alternate கோபம் வா, which has its subject in the dative- வானத்திற்குக் கோபம் வந்தது. Another example is ஊர் புகழ் அடைந்தது: ஊருக்குப் புகழ் வந்தது. (புகழ் ‘fame’)

4.உயரமான and உயர்ந்த are two forms of the adjective. The first is formed by adding –ஆன to nouns (an exception is போதுமான ‘enough’; the second is formed by adding to a verb or a verb root the past tense suffix and –அ. (an exception is   அழகிய, which has an alternate அழகான). Another example is தாழ்வான and தாழ்ந்த. பெரிய, சிறிய etc belong to the second category, but in modern Tamil they are not segmented.

5. பார்: This verb (in imperative or in the first person present tense form) is used to suggest challenging someone.

6. உன்னை என்ன செய்கிறேன்: This double direct object construction is different in meaning from object and indirect object construction: உனக்கு என்ன செய்கிறேன். In the first sentence உன்னை is not a recipient, but an object acted on.

7. எல்லாம்: One sense of it when added to a noun is ‘all over’. மரமெல்லாம் ‘all over the trees’. Another example: எனக்குக் கையெல்லாம் வலித்தது ‘I had pain all over my hand’

 

 

Exercises

 

  1. (அ), சரியா, தப்பா என்று சொல்.

 

1. செடி தெருவில் வளர்ந்தது.

2. மரத்தின் இலைகள் வானத்தில் விரிந்தன.

3. வானம் மரத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டது.

4. வானம் மரம் உயர்ந்த சாதி என்று நினத்தது.

5. வானம் தான் முட்டாள் என்று சொன்னது.

6. மரம் உயரமாக வளர விரும்பியது.

7. வெப்பம் குறைந்ததும் இலை பச்சை ஆயிற்று.

8. வானம் தன் உடம்பை அழிக்க முடியாது என்றது மரம்.

9. பனி விழுந்ததும் மரம் செத்துப் போயிற்று.

10. கீழே இருப்பவர்கள் மேலே வர முடியாது.

 

(ஆ).. தப்பு என்று சொன்ன வாக்கியங்களுக்குப் பதில் சரியான வாக்கியங்கள் எழுது.

 

 

 

  1. The words in (அ) have another meaning in addition to the one given in the glossary. These meanings are given in (ஆ) in a random order. Can you identity the right word for the given meaning based on relatedness to the meaning for the word in the glossary? You may consult a dictionary, but you can predict. 

 

(அ) 1. வளர்

        2. கிளை

        3. எல்லை

        4. பனி

       5. தரை

(ஆ) 1. limit

         2. dew

         3. branch (of a company)

         4. floor

         5. develop