10. பிள்ளையார் பிறப்பு

                                                               10. பிள்ளையார் பிறப்பு

 

தமிழ் நாட்டுக் கடவுள்களில் பிள்ளையாரும் ஒருவர்.  இவருக்குக் கணபதி, கணேசர், விநாயகர், விக்கினேசுவரர் என்று பல பெயர்கள் உண்டு.  இவர் யானைத் தலையும் மனித உடம்பும் உடையவர்.  பரமசிவனுடைய மூத்த பிள்ளை.

 

பிள்ளையார் பிறப்பைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன.  அதில் ஒரு கதை இது.

 

ஒரு நாள் பரமசிவனுடைய மனைவி பார்வதி குளத்தில் குளிக்கப் போனாள்.  தான் குளிக்கும்போது ஆண்கள் யாராவது அங்கே வந்து தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்று அவள் பயப்பட்டாள்.  குளத்தங்கரையில் யாரையாவது காவலுக்கு வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.  தோழிகள் யாரும் அங்கே இல்லை.  என்ன செய்வது?  பார்வதி தன் உடம்பைச் சுரண்டினாள்.  அழுக்கு அவள் கையில் திரண்டது.  அந்த அழுக்கு உருண்டையை மனித உருவம் போலச் செய்து கரையில் காவலுக்கு வைத்தாள்.  தண்ணீருக்குள் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தாள்.

 

பரமசிவன் பார்வதியைத் தேடினார்.  அவருக்கு ஒரு அவசரமான காரியம் பற்றி  அவளோடு பேச வேண்டும்.  ஆனால் அவளைக் காணவில்லை.  அவள் குளிக்கப் போயிருக்கிறாள் என்று யாரோ சொன்னார்கள்.  அவர் வேகமாகக் குளத்துக்கு வந்தார்.  கரையில் இருந்த அழுக்கு உருண்டை உருவம் அவரைத் தடுத்தது.  “தேவி குளிக்கிறார்கள்; யாரும் உள்ளே போகக் கூடாது” என்று சொன்னது.

 

“நான் அவளுடைய கணவன்” என்றார் பரமசிவன்.

 

“யாரானாலும் உள்ளே போகக் கூடாது”

 

பரமசிவனுக்குக் கோபம் வந்தது.  அந்த உருண்டை உருவத்தின் தலையைக் கிள்ளி எறிந்தார்.  அப்போது அங்கே வந்த பார்வதி “என் பிள்ளையைக் கொன்றுவிட்டீர்களே! என்று அழ ஆரம்பித்தாள்.

 

“இந்த உருண்டை உருவம் உன் பிள்ளையா?” என்றார் சிவனார்.

 

“இது என் உடம்பிலிருந்து பிறந்தது.  என் உடம்பிலிருந்து பிறந்தது என் பிள்ளைதானே?” என்றாள் பார்வதி.

 

“இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார் பரமசிவம்.

 

“வெட்டிய தலையை உடம்போடு ஒட்ட வைக்க வேண்டும்.  தலையைத் தேடிப் பாருங்கள்” என்றாள் பார்வதி.

 

பரமசிவன் சுற்றிலும் தேடிப் பார்த்தார்.  அந்த அழுக்கு உருண்டையின் தலை அகப்படவே இல்லை.

 

“இப்போது என்ன செய்யலாம்?” என்று பார்வதியிடம் கேட்டார்.

 

“எங்கிருந்தாவது வேறு ஒரு தலை கொண்டுவாருங்கள்.  என் பிள்ளை செத்த நேரத்தில் வேறு எத்தனையோ உயிர்கள் செத்திருக்கும். 

அதில் ஒரு தலையைக் கொண்டுவாருங்கள்”.

 

பரமசிவன் காட்டுக்குள் ஓடினார்.  அங்கே ஒரு யானை செத்துக்கிடந்தது.  அவர் அதனுடைய தலையை அறுத்துக்கொண்டு வந்தார்.

 

பார்வதி அந்த யானைத் தலையையும் அழுக்கு உருண்டையின் மனித உடம்பையும் ஒட்ட வைத்தாள்.  அழுக்கு உருண்டைக்கு உயிர் வந்தது.

 

அந்த உருவம்தான் பிள்ளையார்.

 

Glossary

 

பிறப்பு                                                                             birth

கடவுள்                                                                          God

உடைய                                                                         possessing, having

மூத்த பிள்ளை                                                           elder son

பல                                                                                  many

கதை                                                                              story

குளம்                                                                            pond, tank

ஆண்                                                                             man, male

பயப்படு (பயப்பட, பயப்பட்டு)                            be afraid

குளத்தங்கரை                                                          bund of the pond

கரை                                                                              bank, border

காவல்                                                                          watch, protection

காவலுக்கு வை                                                       have for watching  Also காவல் வை

நினை                                                                           think

தோழி                                                                          friend (female)

சுரண்டு (சுரண்ட, சுரண்டி)                                   scrap

அழுக்கு                                                                     dirt

திரள் (திரள, திரண்டு)                                          (something) collect, gather

உருண்டை                                                              ball

மனித உருவம்                                                     human figure

உருவம்                                                                   figure

இறங்கு (இறங்க, இறங்கி)                              get in, descend

தேடு (தேட, தேடி)                                                search for

அவசரம்                                                                  hurry, urgency

காரியம்                                                                  matter

தடு (தடுக்க, தடுத்து)                                         prevent, block

தேவி                                                                       goddess

கணவன்                                                                husband

கிள்ளி எறி (எறிய, எறிந்து)                           pinch and throw

கொல் (கொல்ல, கொன்று)                          kill

பிற (பிறக்க, பிறந்து)                                      be born

வெட்டு (வெட்ட, வெட்டி)                              cut

ஒட்டவை (-வைக்க, -வைத்து)                   stick together

சுற்றிலும்                                                           around

அகப்படு (-பட, -பட்டு)                                    be in sight, be available

சா (சாக, செத்து)                                              die

அறு (அறுக்க, அறுத்து)                              cut off, snap

 

Notes

 

  1. பிள்ளையாரும் ஒருவர்: -உம் is ‘also’. This is added to the noun that is specified as a member of a set in addition to others. Another example: என் ஆசிரியருக்குப் பிடித்த மாணவர்களில் நானும் ஒருவன். Without –உம் this sentence makes an assertion of the membership.
  2. உண்டு: This form is the neuter of the verb உள், which is equivalent to இரு ‘be’, but it does not take tense markers. It is a frozen form (உள்+ந்து) and is used for neuter singular and plural in a generic sense. An alternate of it is உள்ளது, which gives the sense of present tense: இந்தப் பையில் பணம் உள்ளது / இருக்கிறது ‘There is money in this bag’. இந்தப் பையில் பணம் உண்டு would mean ‘There is generally / usually money in this bag’.
  3. உடை is used as an adjective base (not as a verb meaning ‘possess’) in modern Tamil, from which the adjective form உடைய and nouns derived from it (உடையவன், உடையது) are formed. உடைய itself is used as a marker of adjective when added to abstract nouns: அறிவுடைய ‘learned, knowledgeable’, அன்புடைய ‘dear’. It is similar to in this respect: அறிவுள்ள, அன்புள்ள. உடைய is also used as a possessive or genitive case marker: அவனுடைய ‘his’
  4. இருக்கின்றன: The present tense suffix has the alternate forms கிறு and கின்று. But in neuter plural verbs, only கின்று is used.
  5. பார்த்துவிடுவார்களோ: ஓ at the end of the sentence suggests possibility of happening. That is, the subject suspects that the action may take place. If is at the end of the sentence, it suggests relative certainty or higher order of possibility of happening. That is, the subject believes that the action could take place. The verb with no such sentential ending suggests certainty.
  6. காணவில்லை: An alternate is காணோம். This negative form of the verb always occurs without a subject and always has an object. It translates as ‘X is / was not to be seen / found’.
  7. யாரோ: -ஓ indicates non-specificity. With a question word in the singular, it translates as ‘some (unknown or unremembered)’. யாரோ is ‘someone’. When the question word is plural, it translates as ‘so many / much’ meaning that the number cannot be specified. எத்தனையோ பேர் is ‘so many people’
  8. யாரானாலும்: A conditional clause with a question word in it + உம் has the meaning the specific identity does not matter. It translates as ‘who/what/where-ever, no matter who/what/where etc. யார் வந்தாலும் ‘whoever comes’. If there is no verb in the conditional clause, the dummy verb from ஆனாலும் is added to the question word as in யாரானாலும். An alternate of ஆனாலும் is என்றாலும்: யாரென்றாலும்
  9. சிவனார்: -ஆர் is an honorific suffix masculine and feminine nouns (அம்மையார்). Anthromorphically, it can be added to the nouns of animals (நரியார்). When masculine names ending in -a are borrowed from Sanskrit, the ending is அன் in Tamil; when the noun refers to an abstract quality rather than a person Tamil takes the ending –அம்: பரமசிவன், பரமசிவம். –ஆர் is added only to the former.
  10. நான் என்ன செய்வது: The nominal form of the verb in the neuter expresses the speaker perspective as to the occurrence of action, whether it is possible, it is suggested, the person is capable of doing it etc. With a question word, it suggests the negative that it is not possible / is difficult or the person is not capable. என்ன செய்வது means ‘what shall I do?’ suggesting ‘there is not much that can be done’. நீ போய்த் தேடுவதுதானே / தேடுகிறது is a suggestion meaning ‘you can go and search, can’t you’.

             These constructions have corresponding modal forms: நான் என்ன செய்யலாம்; நீ போய்த் தேடலாமே. These with the intonation of doubt and polite suggestion  mean the same as நான் என்ன செய்வது, நீ போய்த் தேடுவதுதானே.

  1. கிட: An alternate is இரு; கிட highlights the posture while இரு highlights the state of being: மேஜையில் ஒரு பேனா இருந்தது ‘There was a pen on the table’, தரையில் ஒரு பேனா கிடந்தது ‘There was a pen lying on the floor’.  When கிட is used as a light verb added to a verbal participle, it is differentiated from இரு by this difference (படுத்திருந்தான், படுத்துக்கிடந்தான்) and, by extension, by the connotation of the action of the main verb being done in an unmanaged or unintended way. (கதவு திறந்து கிடந்தது / இருந்தது). செத்துக்கிடந்தது, translates as ‘(it was) lying around dead’.  

 

Exercises

 

(அ) சரியா, தப்பா என்று சொல்.

 

1. பிள்ளையாருக்கு இன்னொரு பெயர் முருகன்.

2. பிள்ளையாருக்கு மனிதத் தலையும் யானை உடம்பும் இருக்கும்.

3. பிள்ளையார் சிவனுக்கு இரண்டாவது பிள்ளை.

4. பார்வதி தான் குளிக்கும்போது தன் தோழியைக் காவல் வைத்தாள்.

5. அழுக்குருண்டை பார்வதி எங்கே குளிக்கிறாள் என்று சிவனுக்குக் காட்டியது.

6. பரமசிவன் அழுக்குருண்டையின் தலையை வெட்டி எறிந்தான்.

7. பார்வதி அழுக்குருண்டை தன் பிள்ளை என்றாள்.

8. பார்வதி பரமசிவனிடம் தனக்கு வேறு பிள்ளை கேட்டாள்.

9. பரமசிவன் ஒரு யானையைக் கொன்று அதன் தலையைக் கொண்டுவந்தான்.

10. இந்தக் கதை பிள்ளையாரின் பிறப்பைப் பற்றிய ஒரே கதை.

 

தப்பு என்று பதில் சொல்லியிருந்தால் அவற்றிற்குச் சரியான பதில் சொல்.

 

 

ஆ. You can make compound nouns by combining two nouns with appropriate

    sandhi changes. Make compound nouns from the nouns given below and

    give their meaning.

 

    Ex. அழுக்கு + உருண்டை                       அழுக்குருண்டை ‘ball of dirt’

 

  1. புராணம் + கதை
  2. தண்ணீர் + குடம்
  3. குளம் + கரை
  4. ஆறு + கரை
  5. மனிதன் + உடல்

 

 

இ. Like யார்: யாரானாலும் / யாரென்றாலும், make the second forms as here using the  question words given below and give its meaning.

 

  1. என்ன
  2. எங்கே
  3. எது
  4. எப்படி
  5. யாருக்கு