15. கோயிலைப் பற்றிச் சொல்லுங்கள்

உரையாடல் 15

                                                              கோயிலைப் பற்றிச் சொல்லுங்கள்

 

ஜிம்   -  நீங்கள் கோயிலைப் பற்றிச் சொன்னீர்களே, அதைக் கேட்டு நான் போன

         வாரம் கோயிலைப் பார்க்கப் போனேன்.  ஆனால் என்னை உள்ளே

         விடவில்லை.  ஏன்?

 

ராஜா  -  இந்துக்களைத் தவிர மற்றவர்கள் கோயிலுக்குள்ளே போகக்கூடாது.

 

ஜிம்   -  கோயிலுக்குள்ளே நுழையவேகூடாதா?

 

ராஜா  -  கோயிலுக்குள்ளே கொஞ்ச தூரம் வரைக்கும் போகலாம்.  நீங்கள்

         போய்ப் பார்த்தீர்களா?

 

ஜிம்   -  இல்லை.  எனக்குத் தயக்கமாக இருந்தது.  சுதந்திரத்துக்கு

         முன்னாலேயே கோவிலை எல்லாருக்கும் திறந்துவிடவில்லையா?

 

ராஜா  -  இந்துக்களில்தான் எல்லாருக்கும் திறந்துவிட்டார்கள்.

 

ஜிம்   -  என்னைப்போல் வெளிநாட்டுக்காரர்களுக்கு உங்கள் கோயிலையும்

         சிற்பங்களையும் பார்க்க ரொம்ப ஆசை.

 

ராஜா  -  நானும் இதைப் பற்றிக் கோவில் அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தேன்.

         ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

 

ஜிம்   -  இது எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருக்கிறது.  இதைப் பற்றித்-

         தான் நான் உங்களிடம் கேட்க வந்தேன்.

 

ராணி  -  இந்தாருங்கள், நான் கொஞ்சம் பலகாரம் செய்துவைத்திருக்கிறேன்.

         உங்கள் சிநேகிதரைச் சாப்பிடச் சொல்லுங்கள்.

 

ராஜா  -  அதை ஒரு தட்டில் வைத்து இங்கே கொண்டுவா.  கூடக் கொஞ்சம்

         தண்ணீரும் கொண்டுவா.  இவருக்கு நம் பலகாரம் ரொம்ப காரமாக

         இருக்கும்.

 

ராணி  -  இது இனிப்புதான்.  இந்தாருங்கள்.

 

ராஜா  -  ஜிம், இதைச் சாப்பிட்டுப் பாருங்கள்.  உங்களுக்குப் பிடிக்கிறதோ

         என்னமோ!

 

ஜிம்   -  இது ரொம்ப நன்றாக இருக்கிறது.  கடைகளில் கிடைக்குமா?

 

ராஜா  -  எல்லாக் கடைகளிலும் கிடைக்காது.  நீங்கள் கவலைப்படாதீர்கள்.

         நான் உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.

 

ஜிம்   -  ரொம்ப நல்லது.