16. உடம்பு சரியில்லை

உரையாடல் 16

                                                                       உடம்பு சரியில்லை

 

ஜிம்   -  என்ன படுத்திருக்கிறீர்கள்?  உடம்பு சுகம் இல்லையா?

 

ராஜா  -  உடம்புக்கு ஒன்றும் இல்லை.  காலையில் திருப்பரங்குன்றம் போயிருந்-

         தேன்.  இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் திரும்பி வந்தேன்.

         அதனால் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது.

 

ஜிம்   -  அங்கே என்ன விசேஷம்?

 

ராஜா  -  இன்றைக்குக் கார்த்திகை இல்லையா?  அது முருகனுக்கு ரொம்ப

         விசேஷமான நாள்.  நான் சாமி கும்பிட அங்கே போனேன்.  நீங்கள்

         அங்கே போயிருக்கிறீர்களா?

 

ஜிம்   -  நான் ஒரு தடவை போயிருக்கிறேன்.  மலைமேல் கூட ஏறிப்

         பார்த்திருக்கிறேன்.  நீங்கள் இன்றைக்கு மலைமேல் ஏறினீர்களா?

 

ராஜா  -  எனக்கு வயது ஆகிவிட்டது.  என்னால் முடியாது.  பஸ்ஸுக்காக

         வரிசையில் நிற்கக்கூட முடியவில்லை.

 

ஜிம்   -  இந்த சமயத்தில் ரொம்ப பஸ் விடமாட்டார்களா?

 

ராஜா  -  ரொம்ப ஸ்பெஷல் பஸ் விட்டிருந்தார்கள்.  அப்படியும் கூட்டம் குறைய-

         வில்லை.

 

ஜிம்   -   நீங்கள் பஸ்ஸுக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள்?

 

ராஜா  -  சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்திருப்பேன்.  அவ்வளவு நேரம்

         காத்திருந்தும் பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கவில்லை.

 

ஜிம்   -  அடப் பாவமே!  ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

 

ராஜா -  இது மட்டும் இல்லை.  கோவிலுக்கு உள்ளேயும் ஒரே கூட்டம்.  உள்ளே

        நுழையவே இடம் இல்லை.  எப்படியோ இடித்துக் கிடித்து உள்ளே

        போனேன்.

 

ஜிம்   -  நல்ல வேளை, நான் உங்களோடு வரவில்லை.

 

ராஜா  -  ஆமாம்.  அந்தக் கூட்டத்தில் நீங்கள் மயங்கி விழுந்திருப்பீர்கள்.  அதோடு

         உங்களை உள்ளே விட்டிருக்கவும் மாட்டார்கள்.

 

ஜிம்  -  நீங்கள் படுத்திருங்கள்.  நாம்தான் அடிக்கடி சந்திக்கிறோமே!  நாளைக்குச்

        சாவகாசமாகப் பேசுவோம்.